இலங்கை

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை – கெஹெலிய

சீனா வழங்கிய 28 மில்லியன் டொலர் மானியம், 14 வகையான அத்தியாவசிய மருந்துகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வதந்திகள் போல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், சுகாதாரத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியக் கடனில் இருந்து 200 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

மேலும், இந்திய கடன் மூலம் பெறப்பட்ட 1 பில்லியன் டொலர்களில் எஞ்சிய 35 மில்லியன் டொலர்களை ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் (24) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவில் சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்தும் குழுவின் கவனத்திற்கு உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.

அரச வைத்தியசாலைகளை உரிய முறையில் பராமரித்து தேவையான வைத்திய உபகரணங்களை வழங்க தவறியமையினால் நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய பொருளாதாரத்தில் நடுத்தர வருமான பிரிவினரால் தனியார் வைத்தியசாலை வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது எனவும், எதிர்காலத்தில் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை தோராயமாக 25% – 30% வரை அதிகரிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தொழிநுட்ப மருத்துவ ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தொழில்நுட்ப மருத்துவ ஊழியர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் பணிபுரிந்து வருவதால், குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button